அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை முடிவுகள் வருவதில் காலதாமதம்-நோயாளிகள் அவதி
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆகிறது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆகிறது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரி
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர தினமும் சிகிச்சைக்காக தூத்துக்குடி, தென்காசி போன்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான புற நோயாளிகள் தங்களது உறவினர்களுடன் வந்து செல்கின்றனர். இதில் உள் நோயாளிகளாக சேர்க்கப்படும் அனைவருக்கும் முதலில் ரத்த பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இதற்காக அரசு ஆஸ்பத்திரியின் ஒரு கட்டிடத்தில் ரத்த பரிசோதனை அறை செயல்பட்டு வருகிறது. இங்கு பரிசோதனைக்காக நோயாளிகளின் ரத்தம் எடுக்கப்பட்டு மறுநாள் அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும்.
பரிசோதனை முடிவில் தாமதம்
இந்நநிலையில், பரிசோதனைக்காக ஆய்வகத்தில் கொடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் முடிவை பெற ஒரு சில நேரங்களில் 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர். சுமார் 15 முதல் 20 மணி நேரம் வரை, இரவு பகல் பாராமல் வரிசையில் காத்து கிடக்க வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு ரத்த மாதிரியின் அறிக்கை வந்த பிறகே அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் ரத்த பரிசோதனை முடிவு வருவதில் சில சமயங்களில் தாமதம் ஏற்படுவதால் உரிய சிகிச்சை, உரிய நேரத்தில் அளிக்கப்படாமல் சிலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது.
கோரிக்கை
50 ஆண்டை தாண்டிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ரத்த மாதிரியின் ஆய்வு முடிவை பெறுவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டியிருப்பது வேதனையளிப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் குறை கூறுகின்றனர்.
எனவே இந்த விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, கூடுதல் ஆய்வகம் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்து, ரத்த பரிசோதனை முடிவுகள் தாமதம் இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.