திருக்கோவிலூர் அருகே வீட்டுமனை வழங்குவதில் காலதாமதம்:அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
திருக்கோவிலூர் அருகே வீட்டுமனை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள செங்கனாங்கொல்லை கிராமத்தில் வீட்டுமனை இல்லாத 166 ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக அதே ஊரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் சுமார் 12 ஏக்கர் அளவுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள இடம் உரிய நபர்களுக்கு பட்டா போட்டு வழங்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் நில உரிமையாளர்கள் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதனால் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இடம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள ஆதிதிராவிட மக்களுக்கு உடனடியாக இடத்தை ஒப்படைக்குமாறு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மக்கள் திருக்கோவிலூர் வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது நிர்வாக காரணங்களால் காலதாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செங்கனாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் செங்கனாங்கொல்லை பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் நில அளவை துறையினர் கிராமத்திற்கு வந்து வீட்டுமனை பட்டா வழங்க அரசு கையகப்படுத்திய இடத்தில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.