தர்மபுரி ராமாக்காள் ஏரியில் காலதாமதமாகும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்


தர்மபுரி ராமாக்காள் ஏரியில் காலதாமதமாகும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி

ராமாக்காள் ஏரி

தர்மபுரி நகரையொட்டி ராமாக்காள் ஏரி 132 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியால் தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மாவட்ட தலைநகரான தர்மபுரியில் பொதுமக்கள் பொழுதை போக்கும் வகையில் பெரிய அளவிலான பூங்காக்கள் மற்றும் சுற்றுலா பகுதிகள் எதுவும் இல்லாததால் ராமாக்காள் ஏரிக்கரை பகுதியை சுற்றுலா தளமாக அறிவித்து சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராமாக்காள் ஏரி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

முதற்கட்டமாக பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.1 கோடி மதிப்பில் ராமாக்காள் ஏரிக்கரை பகுதியில் நடைபாதை மற்றும் சுற்றுப்புற கம்பி வேலி அமைக்கப்பட்டது. மேலும் ஏரிக்கரை பகுதியில் புல் தரைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் பொழுதை போக்கும் வகையில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

இதற்கான நிதி ஒதுக்கப்படாததால் ராமாக்காள் ஏரி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து கால தாமதம் இருந்து வருகிறது. ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்ட நடைபாதை ஆங்காங்கே சேதம் அடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சுகாதார வளாகம் பூட்டி கிடக்கிறது.

கோரிக்கை

இந்த ஏரிக்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழ்நிலை உள்ளது.

இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் அந்த பகுதிக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ராமாக்காள் ஏரிக்கரை பலப்படுத்தப்பட்டு உபரி நீர் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே ராமாக்காள் ஏரி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்தகருத்துகள் வருமாறு:-

கழிவுநீர் கலப்பு

தர்மபுரி வட்டார வளர்ச்சி நகரை சேர்ந்த சுமதி: தர்மபுரி நகரின் நுழைவுப்பகுதியில் அமைந்துள்ள ராமாக்காள் ஏரியில் தற்போது தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரியில் தர்மபுரி நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக செல்லவே சங்கடப்படும் சூழ்நிலை உள்ளது.

மேலும் இந்த ஏரியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுவதால் ஏரி மாசுபடும் சூழ்நிலை உள்ளது. எனவே ஏரியில் கழிவு நீர் கலக்காத வகையில் தடுக்க வேண்டும். ஏரியில் குப்பைகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றவேண்டும்.

பாதுகாப்பு

தர்மபுரி ராமாக்காள் ஏரிக்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் பழனி:

இந்த ஏரியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்று நீண்ட காலமாக நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம். ஆனால் எந்த பணியும் தொடங்கப்படவில்லை. அங்குள்ள நடைபாதை முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. இந்த ஏரிக்கரை பகுதியில் அவ்வப்போது துப்புரவு முகாம் என்ற பெயரில் திடீரென வருகிறார்கள். குப்பைகளை எடுத்து வேறு ஒரு பகுதியில் கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் எந்த பயனும் இல்லை.

மாலை மற்றும் இரவு நேரங்களில் இங்கு வரும் பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. போதுமான மின்விளக்கு வசதி இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் இங்கு தேவையான மின் விளக்குகளை அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

குடிநீர் வசதி

சாக்கு வியாபாரி அண்ணாமலை:-

தர்மபுரி ராமாக்காள் ஏரிக்கரைக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு வருகின்றனர். அவர்களுக்கு அங்கு தேவையான குடிநீர் வசதி கூட செய்து கொடுக்கப்படவில்லை. சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் அங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட பொழுதுபோக்கு அம்சங்களை நிறுவ வேண்டும். நகராட்சி சார்பில் அவ்வப்போது ஏரிக்கரை பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டு சுற்றுப்புறத்தை பாதுகாக்க வேண்டும்.

இந்த பகுதியை தொடர்ந்து கண்காணிக்க முழு நேர காவலர்களை நியமிக்க வேண்டும். பொதுமக்கள் அமர்வதற்கு தேவையான இருக்கைகளை அமைக்க வேண்டும். ஏரிக்கரை பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும். தற்போது மழை காலம் என்பதால் ஏரிக்கரை பகுதிகளில் நிழல் தரும் மரக்கன்றுகளை நட வேண்டும்.

எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத தர்மபுரி நகரில் ராமாக்காள் ஏரியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?


Next Story