பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி


பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் நாளை அனுப்பப்பட உள்ளது.

ராமநாதபுரம்

வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் நாளை அனுப்பப்பட உள்ளது.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறை முடிந்து வருகின்ற 1-ந் தேதி அன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வருகின்ற 1-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.

இதனிடையே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச புத்தகங்கள் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பும் பணி தொடங்கப்பட உள்ளது.

புத்தகங்கள் அனுப்பும் பணி

இதற்காக புத்தகங்களானது ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேளானூரில் உள்ள பள்ளிஎன இரண்டு இடங்களில் சென்னை மற்றும் கோயமுத்தூர் பதிப்பகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இறக்கி வைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ள அந்த புத்தகங்களை பாடவாரியாக தரம் பிரிக்கும் பணியில் கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த புத்தகங்கள் அனுப்பும் பணியானது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் மேற்பார்வையில் நாளை முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நாளை தொடக்கம்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 160 பள்ளிகள் செயல்படுகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசின் இலவச புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நாளை தொடங்கப்பட உள்ளது.

1-ந் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அரசின் இலவச புத்தகங்கள் அந்தந்த பள்ளி மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story