கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க கோரிக்கை
கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வெண்ணைமலை நலவாரிய அலுவலகம் முன்பு ேநற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகை கால போனசாக ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும். வாரிய கூட்ட முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும். 1-ம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட வேண்டும். திருமண உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். இயற்கை மரண உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி, ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்தால் இயற்கை மரண உதவி வழங்கிட வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்தி விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் 10-ந்தேதிக்குள் பென்ஷன் வழங்கிட வேண்டும். பணப்பயன் மனுக்களை விரைந்து பரிசீலித்து 30 நாட்களுக்குள் பணப்பயன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.