வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை
தென்காசியில் பகலில் லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்க அனுமதிக்க வேண்டும்- வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை
தென்காசி வர்த்தக சங்கம் சார்பில் இதன் தலைவர் ராஜசேகரன், செயலாளர் பரமசிவன், பொருளாளர் ஜெயராமன் மற்றும் வியாபாரிகள் நேற்று தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் தென்காசியில் லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 10-9-2022 அன்று போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடத்தி இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் சரக்குகளை இறக்க வேண்டும் என்று கூறினார்கள். இந்த நேரத்தில் சரக்குகளை இறக்குவது சாத்தியமில்லை.
எனவே இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் லாரியில் இருந்து சரக்குகளை இறக்க அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.