அயலக தமிழர் தின விழாவில் கோரிக்கை:ஐக்கிய அரபு அமீரகத்தில் படிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு பாடப்புத்தகம்;துபாயில் வசிக்கும் ஈரோடு பெண் வேண்டுகோள்


அயலக தமிழர் தின விழாவில் கோரிக்கை:ஐக்கிய அரபு அமீரகத்தில் படிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு பாடப்புத்தகம்;துபாயில் வசிக்கும் ஈரோடு பெண் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Jan 2023 3:19 AM IST (Updated: 18 Jan 2023 3:19 AM IST)
t-max-icont-min-icon

அயலக தமிழர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய துபாய் வாழ் ஈரோடு பெண், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

ஈரோடு

அயலக தமிழர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய துபாய் வாழ் ஈரோடு பெண், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

அயலக தமிழர் தினம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் அயலக தமிழர் தினம் கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகள் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவின் முதல் நாளில் துபாயில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீரோகிணி என்ற பெண் அழைக்கப்பட்டு இருந்தார். முனைவர் பட்டம் பெற்ற அவர் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பண்பாடு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்பாட்டிலும், செழிப்பிலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேம்பட்ட இனமாக நம் தமிழ் இனம் இருந்தது.

கீழடி, ஆதிச்சநல்லூர், கொந்தகை, அகரம் பகுதிகளில் நடந்து உள்ள அகழ்வாய்வுகள் நடக்கும் பகுதிகளில் இன்றைய மாணவ-மாணவிகளை அழைத்துச்சென்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழ் மாணவ-மாணவிகளுக்கும், தமிழ்நாட்டு மாணவ-மாணவிகளுக்குமான கருத்து பரிமாற்ற நிகழ்வுகள் மூலமாக வரலாறு, தொழில் முறை, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவற்றை பரிமாற்றம் செய்யும் வகையில் கலாசார பண்பாட்டு சுற்றுலாக்கள் அமைய வேண்டும்.

தமிழ் பாடபுத்தகங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் தமிழ் விருப்பத்தேர்வு வகுப்புகள் உள்ளன. ஆனால், அங்கு தமிழ் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் நகல் பிரதி மட்டுமே வழங்கப்படுகிறது. 1 மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வண்ணங்கள் இல்லாத தமிழ் புத்தகத்தை படிக்க சிரமப்படுகிறார்கள்.

எனவே தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியாளர் பணிகள் கழகம் மூலம் வெளியிடப்படும் தமிழ் பாடபுத்தகங்களை ஐக்கிய அரபு அமீரக தமிழ் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

இதனால் நம் மொழியின் செழிப்பான சிறப்பை முதல் வகுப்பில் இருந்தே குழந்தைகள் அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தி பேசினார்.


Next Story