மதுக்கடைகளை அகற்ற வேண்டும் கலெக்டருக்கு கோரிக்கை
திருவாரூர் விளமல் தேசிய நெடுஞ்சாலை அருகில் இயங்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம், பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாரூர் விளமல் தேசிய நெடுஞ்சாலை அருகில் இயங்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம், பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
மதுக்கடைகள்
திருவாரூர் விளமல் கடைத்தெருவில் 2 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள இந்த கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் பல்வேறு கட்சிகளின் சார்பில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 'தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு அப்பால் டாஸ்மாக் மதுபான கடைகளை அமைக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் மதுக்கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடைகளை அகற்றி விட வேண்டும் என தமிழக அரசும் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
ஆனால் விளமலில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 150 மீட்டர் தூரத்திற்கு உள்ளேயே 2 டாஸ்மாக் கடைகளும் இயங்கி வருகின்றன. மதுக்கடைகள் உள்ள பகுதி பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ் ஏறும் பகுதியாக உள்ளது. மேலும் இந்த இடம் திருவாரூர், தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் சாலைகளை இணைக்கும் மைய பகுதியாகும்.
போக்குவரத்து நெருக்கடியான இந்த இடத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குவது சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.