மழைக்காலத்துக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் உள்ள4 கால்வாய்களையும் தூர்வார கோரிக்கை
மழைக்காலத்துக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் உள்ள4 கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்று கலெக்டரிடம் எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தின் கீழ் உள்ள 86 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மழைகாலத்தில் பெய்த கனமழையால் தண்ணீர் வடியாமல் விவசாயிகளும், விவசாய பயிர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மருதூர் மேலக்கால், கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பகுதியில் உள்ள பெரிய வாய்கால்கள் முதல் சிறிய கடைநிலை பாசன வாய்கால்கள் வரை விவசாயிகளின் நலன் கருதி மழைக்காலத்திற்கு முன்னதாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் தாமிரபரணி பாசனத்திலுள்ள 86 ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயிகள் மழைகாலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காப்பாற்றப்படுவதோடு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயநிலங்கள் அதிக விளைச்சல் பெறும், மகசூல் அதிகரிக்கும், மழை நீரையும் சிக்கனமாக சேமிக்கலாம். விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கூறி உள்ளார்.