அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்

அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்
நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் பேசினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் சுமதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 62 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-
கிராம நிர்வாக அலுவலகம் வேண்டும்
ராஜவள்ளி(தி.மு.க.): திருவாலங்காடு மெயின் ரோட்டில் உள்ள மின்மாற்றி மிகவும் பழுதடைந்துள்ளது. அதை உடனடியாக மாற்றித்தர வேண்டும்.
வசந்தகோகிலம் (தி.மு.க.): மேட்டுப்பாக்கத்தில் ஈமகிரியை மண்டபம் புதிதாக அமைத்து தர வேண்டும்.
சலீமாபானு(சுயேச்சை): பெருமாள் கோவில்,மேலையூர் ஊராட்சிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
சிவகுமார் (பா.ம.க.): கோனேரிராஜபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களை கழிப்பறை வசதியுடன் கட்ட வேண்டும். கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.
புதிய பாலம் அமைத்து தர வேண்டும்
வினோத்(பா.ஜ.க.): கள்ளிக்காட்டில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடிக்காமல் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும். ஒன்றியக்குழு கூட்டங்களுக்கு மின்சாரம்,சுகாதாரத்துறை,வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வருவதே இல்லை பொதுமக்களின் குறைகளை அவர்களுக்கு எவ்வாறு கொண்டு செல்வது.
நெடுஞ்செழியன்(அ.தி.மு.க): மழைக்காலங்களில் கடமங்குடி,இடைக்கியம்,கொத்தங்குடி ஆகிய கிராமங்கள் ஆற்றுப்பகுதியின் ஓரத்தில் உள்ளதால் மழை நீரானது உள்ளே புகுந்து விடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திவ்யா(தி.மு.க): கொழையூரிலிருந்து கோமல் செல்வதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. எனவே பெரட்டக்குடி வீரசோழன் ஆற்றில் புதிய பாலம் ஒன்று அமைத்து தர வேண்டும்.
ராஜா(தி.மு.க.):சேத்திரபாலபுரம் ஊராட்சி ராமாமிர்தம் நகரில் புதிய சமுதாயக்கூடம் ஒன்று அமைக்கவேண்டும்.
நிதி நிலைமைக்கு ஏற்ப
தலைவர்: அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






