எடப்பாடி அருகே நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கட்டிய 40 வீடுகள் இடித்து அகற்றம்-அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு
எடப்பாடி அருகே நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி:
நீர்வழி ஆக்கிரமிப்பு
எடப்பாடி அருகே குரும்பப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தாணமூர்த்தியூரில் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து 40-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் எடப்பாடி- சங்ககிரி சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே வீட்டு மனைகள் (பட்டா) வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீர்வழி பாதையில் வசிப்பவர்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய் துறை மூலம் முன்னறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை பெற்று கொண்டு தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நீர்வழி பாதையில் குடியிருந்து வந்தனர்.
வீடுகள் இடிப்பு
இதையொட்டி நேற்று அந்த பகுதிக்கு எடப்பாடி தாசில்தார் லெனின், கொங்கணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி, வருவாய் அலுவலர் நதியா, கிராம நிர்வாக அலுவலர் கோபால் மற்றும் பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர். பின்னர் அங்கிருந்த நீர்வழி ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு, தாங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற கால அவகாசம் வேண்டும் என்றும் உடனடியாக செல்ல முடியாது என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அதில் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றும் விதமாக உடனடியாக இப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளும் அகற்றப்படுவதாக கூறி அங்கிருந்த குடியிருப்புகளை தொடர்ந்து இடித்து அகற்றினர். அதன்படி நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.