தாரமங்கலம் நகராட்சி மயானத்தில் 500 கல்லறைகள் இடித்து அகற்றம்


தாரமங்கலம் நகராட்சி மயானத்தில் 500 கல்லறைகள் இடித்து அகற்றம்
x

தாரமங்கலம் நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் 500 கல்லறைகள் இடித்து அகற்றப்பட்டன.

சேலம்

தாரமங்கலம்:

மயானம்

தாரமங்கலம் நகராட்சி 26-வது வார்டு சங்ககிரி மெயின் ரோட்டில் மயானம் உள்ளது. இதில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுவதுடன், அங்கு அடக்கமும் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் மயானத்தில் உள்ள இறந்தவர்களின் கல்லறைகளை இடித்து அகற்றி விட்டு, மயானத்தை சீரமைத்து பூங்காவுடன் கூடிய எரிவாயு தகனமேடை அமைக்க ரூ.1½ கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த பணிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. கல்லறைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கல்லறைகள் இடித்து அகற்றம்

இந்தநிலையில் நேற்று மயானத்தில் பூங்காவுடன் கூடிய எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கியது. அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் மயானத்தில் இருந்த இறந்தவர்களின் 500-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இடித்து அகற்றப்பட்டன. இந்த பணியை நகராட்சி தலைவர் குணசேகரன், ஆணையாளர் முஸ்தபா, வருவாய் ஆய்வாளர் முருகேசன், நகராட்சி முதன்மை பொறியாளர் சரவணன், கவுன்சிலர்கள் தனபால், பாலசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.

கல்லறைகள் இடித்து அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story