தடையை மீறி கட்டிய கட்டிடங்கள் இடிப்பு


தடையை மீறி கட்டிய கட்டிடங்கள் இடிப்பு
x

கூடலூரில் செக்சன்-17 நிலத்தில் தடையை மீறி கட்டிய கட்டிடங்களை வருவாய்த்துறையினர் இடித்து நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் செக்சன்-17 நிலத்தில் தடையை மீறி கட்டிய கட்டிடங்களை வருவாய்த்துறையினர் இடித்து நடவடிக்கை எடுத்தனர்.

வளர்ச்சி பணிகளுக்கு தடை

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சட்டப்பிரிவு-17 வகை நிலம் உள்ளது. இதில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இந்தநிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் செக்சன்-17 நிலத்தில் தடையை மீறி கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செக்சன்-17 நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை வருவாய்த் துறையினர் இடித்து அகற்றினர்.

தொடர்ந்து இனிவரும் காலங்களில் தடையை மீறி கட்டிடங்கள் கட்டக்கூடாது என எச்சரித்தனர். இந்த நிலையில் இடித்த இடங்களில் மீண்டும் கட்டிடங்கள் கட்டப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி, கட்டிடங்கள் கட்டக் கூடாது என உத்தரவிட்டனர். ஆனால், அதையும் மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதாக கூறப்படுகிறது.

கட்டிடங்கள் இடிப்பு

இந்தநிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கூடலூர் பகுதியில் உள்ள நந்தட்டி, செம்பாலா, எம்.ஜி.ஆர். நகர், காளம்புழா ஆகிய இடங்களில் வருவாய்த் துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கடைகள், வீடுகளை வருவாய்த் துறையினர் இடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வருவாய்த் துறையினரின் அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, செக்சன்-17 நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏற்கனவே இடிக்கப்பட்டது. இருப்பினும், அதே இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இதனால் உயர் அதிகாரிகளின் உத்தரவை ஏற்று கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. என்றனர்.


Next Story