நெல்லிக்குப்பம் அருகே சாலை விரிவாக்கப் பணி:சிந்தாமணி விநாயகர் கோவில் இடித்து அகற்றம்புதிதாக கட்டுவதற்கு ஏற்பாடு
நெல்லிக்குப்பம் அருகே சாலை விரிவாக்கப்பணிகாரணமாக சிந்தாமணி விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது. அங்கு புதிதாக கோவில் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நெல்லிக்குப்பம்,
சாலை விரிவாக்க பணி
கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே இருந்த சாலையின் இருபுறங்களிலும் அளவீடு செய்யப்பட்டு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. மேலும் கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதில், காராமணிக்குப்பம் பகுதியில் சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் நெடுஞ்சாலைத்துறை இடத்திலும், கோவில் இடத்திலும் இருந்து வந்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் தேவையான பகுதி வரை கோவிலை இடித்து, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டனர்.
புதிய கோவில் கட்டுவதற்கு அனுமதி
அப்போது அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்களுக்கு புதிதாக கோவில் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி நெடுஞ்சாலைத்துறையினர் புதிதாக கோவில் கட்டுவதற்கு ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனர்.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் கோவிலில் பாலாலயம் செய்துவிட்டு புதிதாக கோவில் கட்டும் பணிக்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு இருந்த நிலையில், தற்போது அதற்கான அனுமதி கிடைத்தது.
இதையடுத்து, உரிய அனுமதியோடு பழைய கோவிலை இடித்து அகற்றும் பணியை அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர்.
இடித்து தரைமட்டமாக்கினர்
இதில் கோவில் செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் ஊர் மக்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் கொண்டு சிந்தாமணி விநாயகர் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர்.
பின்னர் நெடுஞ்சாலைத்துறை இடங்களை தவிர்த்து எந்த இடர்பாடுகளும் இல்லாமல் புதிதாக விநாயகர் கோவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் மகாதேவி தெரிவித்துள்ளார்.
புதிய கோவில் கட்டப்பட்டாலும், இத்தனை ஆண்டுகாலம் வழிபட்டு வந்த கோவில் கண் எதிரே இடிக்கப்படுதை பர்த்து அந்தபகுதி மக்கள் மிகுபந்த கவலையுடன் இருந்ததையும் பார்க்க முடிந்தது.