சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்
x

வடமதுரை அருகே சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

திண்டுக்கல்

சாலையோர ஆக்கிரமிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில், திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களை சிலர் கட்டியுள்ளனர். இதனால் அய்யலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

எனவே அய்யலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு சர்வீஸ் ரோடு மற்றும் அய்யலூர் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை 6 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கட்டிட உரிமையாளர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

எதிர்ப்பு-வாக்குவாதம்

தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விதித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் செந்தில்குமார் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு நேற்று வந்தனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துர்காதேவி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அய்யலூரில் குவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. அப்போது ஆக்கிரமிப்பு செய்த கட்டிட உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கட்டிடங்கள் இடித்து அகற்றம்

இதற்கிடையே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த சிலரை பிடித்து போலீசார் அங்கிருந்து இழுத்து சென்று அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டன.

ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில், தனியார் நகைக்கடன் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடமும் இடித்து தள்ளப்பட்டது. அதனை இடித்தபோது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மாடிக்கு சென்று அலாரத்தை நிறுத்தினர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் செந்தில்குமார் கூறியபோது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம், அய்யலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story