பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு
திண்டுக்கல்லில், பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதை ஆக்கிரமிப்பு
கரூர் மாவட்டம் தாந்தோணியை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் அண்ணாநகரில் உள்ளது. அவருடைய இடத்துக்கு செல்வதற்கு 40 அடி பாதை இருக்கிறது.
இந்த நிலையில் அவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், திண்டுக்கல் அண்ணாநகரில் மக்களின் பொது பயன்பாட்டுக்கான 40 அடி பாதையை ஆக்கிரமித்து தனிநபர் கட்டிடம் கட்டி இருப்பதாகவும், பாதையை மீட்குமாறும் கூறியிருந்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள், அந்த கட்டிடத்தை அகற்றும்படி உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நேற்று அண்ணாநகருக்கு வந்தனர். பின்னர் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்பு
ஒரு மாடி கொண்ட அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற 4 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் கட்டிடத்தை இடிக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்ட சம்பவம், திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.