பில்லர்ராக் பகுதியில் கட்டப்பட்ட சுவர் இடிப்பு
கொடைக்கானல் பில்லர்ராக் பகுதியில் கட்டப்பட்ட சுவர் இடிக்கப்பட்டது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில் பில்லர்ராக் எனப்படும் தூண் பாறையும் ஒன்று. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலா இடத்தின் உள்ளே சென்று கண்டு ரசிக்க, வனத்துறை சார்பில் நுழைவு வாயில் பகுதியில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இருப்பினும் சில சுற்றுலா பயணிகள் சாலையில் சென்றவாறும், நுழைவு வாயிலின் முகப்பு பகுதியில் நின்றபடியும் பில்லர்ராக்கை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் பில்லர்ராக் பகுதியை சுற்றி திடீரென்று 22 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வந்தது. இதனால் பில்லர்ராக் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகப்பு பகுதியில் நின்றபடி பில்லர்ராக்கின் இயற்கை அழகை கண்டுரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கொடைக்கானல் வியாபாரிகள், சுற்றுலா வாகன டிரைவர்கள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பில்லர்ராக்கை மறைத்து சுவர் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இது மாறியது. இதனால் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் 22 அடி உயர சுவரை இடிக்க முடிவு செய்தனர். அதன்படி, சுவரை இடிக்கும் பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பில்லர்ராக் பகுதியில் கட்டப்பட்ட சுவரின் உயரம் அதிகமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார் வந்தது. இதையடுத்து சுவரின் உயரம் குறைக்கப்பட்டு, அதில் அழகோவியங்கள் வரையப்பட உள்ளன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு குறிப்பிட்ட பகுதி செல்பி எடுக்கும் பகுதியாக மாற்றப்படும் என்றனர்.