அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து ஒப்பந்த மற்றும் தினக்கூலி ஊழியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் இளவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். அரசுதுறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட இணை செயலாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீதர் நன்றி கூறினார்.