தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமை தாங்கினார். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், மாவட்ட பொருளாளர் முத்து, நிர்வாகி நரேந்திரன், மகிளா காங்கிரஸ் மாவட்டதலைவர் காளியம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய ராணுவத்தை சிதைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் அக்னிபத் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் கனகராஜ், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சென்னகேசவன், தங்கவேல், வட்டார தலைவர்கள் வேலன், காமராஜ், ஜனகராஜ், கணேசன், நிர்வாகிகள் பெருமாள் கவுண்டர், வேடியப்பன், வடிவேல், கிருஷ்ணன், நடராஜன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி ஜெய்சங்கர் நன்றி கூறினார்.