அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தின் தர்மபுரி கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காவேரி, நிர்வாகிகள் சதாசிவம், முனுசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஓய்வு பெறக்கூடிய ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே முழுமையாக பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவாக பேசி முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.