போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் ரவி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மண்டல பொது செயலாளர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்தத்தை காலதாமதம் செய்யாமல் விரைவாக பேசி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க கூடாது. போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு போதிய அளவு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.