மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பென்னாகரம் அருகே விவசாயியை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே விவசாயியை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பத்ரஅள்ளி ஊராட்சி கூழிக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி அர்த்தனாரி. இவரது வீட்டுக்கு கடந்த மாதம் 30-ந் தேதி இரவு வனச்சரகர் ஆலயமணி தலைமையிலான வனத்துறையினர் சென்று நாட்டுத்துப்பாக்கி எங்கே வைத்துள்ளாய் என கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த அவரது மனைவி சுதா மற்றும் குழந்தைகளையும் வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அர்த்தனாரி மற்றும் அவரது மனைவியை தாக்கி பொய் வழக்கு போட்ட வனத்துறையினரை கண்டித்து நேற்று பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், சக்திவேல், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமார் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார்.
கோஷங்கள்
இ்ந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், சின்னசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்பு, செல்லன், சுதா பாரதி, சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் வனத்துறையினரை கண்டித்து பேசினர். இ்தில் பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாசில்தார் அசோக்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.