ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குழந்தைவேலு, மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் தேவராசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள வீட்டுவரி, சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா ரூ.21 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும்.

மின் கட்டண உயர்வு

அரசு போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், மின்வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு பொது நிறுவனங்களை தனியார்படுத்தும் முயற்சியை கைவிடவேண்டும். கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் மாதம் தலா ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கொரோனா காலங்களில் பணியாற்றிய அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story