விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன் எம்.பி. சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

நாமக்கல்

ஆர்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டையில் மர்மமான முறையில் இறந்த பரமசிவம் வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி ஏனாதியில் அம்பேத்கரின் உருவ சிலையை அகற்றியதோடு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்தும், கரூர் மாவட்டத்தில் கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் கல்குவாரிகளை மூடச்சொல்லி போராடிய ஜெகநாதன் படுகொலையை கண்டித்தும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்த பரமசிவம் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.

ஏமாற்றம் அளிக்கிறது

திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி பிறந்தநாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழகத்தில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகள் முன்மொழிந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கும் தடை விதித்திருப்பதாக தகவல் கூறுகின்றன.

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு ஏராளமான அரசியல் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த தடை நமக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்படி அணுகி அனுமதி பெற்று, சமூக நல்லிணக்க மனித சங்கிலியை நடத்துவோம். காவல்துறையிடம் இதுகுறித்து மனு கொடுக்க உள்ளோம். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் 50 இடங்களில், நாங்களும் மனித சங்கிலி நடத்தினால் சட்ட ஒழுங்கு ஏற்படும் என்ற அச்சம் அரசுக்கு இயல்பாக ஏற்படதான் செய்யும். அந்த 50 இடங்களில் அனுமதி மறுத்தால் சரி. நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவிய போராட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்திருப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது.

அனுமதிக்க வேண்டும்

நாங்கள் 500 இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதி கோரி இருந்தோம். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த இருந்த 50 இடங்கள் போக, மீதமுள்ள இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குனரை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் பழ.மணிமாறன், காமராஜ் மற்றும் நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்ட மேடையிலேயே, கொலை செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு நிதிஉதவியை திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.


Next Story