ஆர்ப்பாட்டம்
பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முனீஸ்வரன், துணைத்தலைவர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க மாவட்ட நிர்வாகிகள் அதியமான், வேலம்மாள், சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ராமசாமி தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம், நலச்சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் இலவச காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். 50 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனங்கள் வழங்க வேண்டும். கல்வித்தகுதி வாய்ந்தவர்களை கொண்டு பால் பரிசோதனை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.