பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகி சுப்பிரமணி, அமைப்பு செயலாளர் முருகேசன், பொருளாளர் சின்னசாமி, ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், துணைத்தலைவர் அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில பொருளாளர் இளங்கோ கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 5:2 என்ற விகிதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். ரூ.2,000 தனி ஊதியத்திற்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் ஆனந்தன், ராமச்சந்திரன், முருகேசன், முருகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story