அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை எதிரில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல், நாகோஜனஅள்ளி நகர செயலாளர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பல மடங்கு உயர்வு
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் செலுத்திய மின் கட்டணத்தை விட, பல மடங்கு கூடுதலாக தற்போது மின் கட்டணம் மக்கள் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 2019-ம் ஆண்டு பால் விலை உயர்ந்த போது ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.3 லிட்டருக்கு குறைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தற்போது 4 மடங்கு உயர்த்தி லிட்டர் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.
அதே போல அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் மீது 5 ரூபாயும், டீசல் மீது 4 ரூபாயும் குறைக்கப்படும் என்றார். கர்நாடக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9 குறைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு விலையை குறைக்கவில்லை. தி.மு.க. அரசு கொடுத்த ஒரு வாக்குறுதியைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை.
மலர் ஏல மையம்
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓசூரில் ரூ.20 கோடியில் மலர் ஏல மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் அந்த கட்டிடத்தை திறக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.