ஆசிரியரை நியமிக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கதவணி அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியரை நியமிக்க கோரி ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை
கதவணி அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியரை நியமிக்க கோரி ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை அருகே உள்ள கதவணி அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுற்று வட்டாரத்தை சேர்ந்த 125 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு விருதுகள் பெறப்பட்டுள்ளன. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஆங்கில ஆசிரியர் பணி மாறுதல் செய்யப்பட்டதால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படுவதாக கூறியும், ஆசிரியரை நியமிக்க கோரியும் நேற்று ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்வி அலுவலர்கள் ஆசிரியரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாணவர்களின் கல்வி பாதிப்பு
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். தற்போது அரையாண்டு தேர்விற்கு முன்பே அவர் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டார். அதற்கு பதிலாக நிரந்தர ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. எனவே பள்ளிக்கு ஆங்கில ஆசிரியரை உடனே நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.