மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊரக வளர்ச்சி துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில் ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையை காலதாமதம் இன்றி விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அல்லது ஆணையர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குறைந்த பட்ச ஓய்வூதியம்
மேலும் பணி ஓய்வு மறுக்கப்பட்டவர்களுக்கு, அரசாணைப்படி ஓய்வூதியப்பலன்கள் வழங்க வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஊராட்சி செயலாளர்களின் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.