விருத்தாசலத்தில்தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கடலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் விருத்தாசலம் கோ.பொன்னேரி ரவுண்டானாவில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
இதனால் ஆத்திரமடைந்த விருத்தாசலம் நகர தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு திட்ட மேம்பாட்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பி.ஜி.சேகர் தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் கந்தசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேஷ், நகர பொருளாளர் ஜோதிமுருகன், நகர துணை தலைவர் விநாயகமூர்த்தி, நகர துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட ஊடகப்பிரிவு ராம்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.