அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன்பு அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன்பு அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி நகராட்சியில் சந்தைப்பேட்டை 1-வது கிராஸ் மற்றும் காந்தி ரோடு ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்த 2 அம்மா உணவகங்களிலும் தலா 12 பேர் என மொத்தம் 24 பேர் பணிபுரிகின்றனர். இந்த உணவகங்களில் திடீர் ஆட்குறைப்பு செய்வதாக கூறி நகராட்சி அலுவலகம் முன்பு அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்றி வருகிறோம். கொரோனா காலத்திலும் வேலை செய்துள்ளோம். தற்போது நகராட்சி ஆணையாளர் 6 பேர் மட்டுமே வேலை செய்யுமாறு கூறுகிறார். இது தொடர்பாக நாங்கள் நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் புகார் செய்துள்ளோம். எங்களை திடீரென்று பணியில் இருந்து நீக்க கூடாது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றனர்.
மாற்று பணி
இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் கூறுகையில், நகராட்சிகளில் அம்மா உணவகங்களின் செலவினத்தை குறைப்பதற்காக ஆட்களை குறைத்து வருகிறோம். அவர்களுக்கு வேறு பணிகளுக்கு வாய்ப்பு இருந்தால் அதையும் செய்து தருகிறோம். ஆனால் இவர்கள் என்னிடம் இதுகுறித்து கூறவில்லை. எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் மாற்று பணிக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என தெரிவித்தார்.