துணைத்தலைவர், தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு


துணைத்தலைவர், தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தை தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மற்றும் 13 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அதேபோல ஆணையாளரை கண்டித்து தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தை தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மற்றும் 13 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அதேபோல ஆணையாளரை கண்டித்து தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி கூட்டம்

கிருஷ்ணகிரி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் 13 தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அதே நேரத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதாவது:-

நகராட்சியில் கவுன்சிலராக பதவியேற்று 10 மாதங்கள் ஆன நிலையில், வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தரவில்லை. இதனால் வார்டில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை. குறிப்பாக வார்டுகளுக்கு தேவையான கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தால் அவை பொருளாக இடம் பெறுவதில்லை.

அடிப்படை வசதிகள்

அதேபோல நகராட்சி கூட்டத்தில் எங்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. குறிப்பாக கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆல் பாஸ் என கூறி கூட்டம் நிறைவு பெறுகிறது. இதனால் எங்கள் வார்டில் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை.

ஆனால் குறிப்பிட்ட சில வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி பணிகளை செய்து வருகிறார்கள். அதனால் இன்றைய கூட்டத்தை நகராட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட தி.மு.க. கவுன்சிலர்களாகிய நாங்கள் புறக்கணித்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 16 பேர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆணையாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பளிக்காத ஆணையாளரை திரும்ப பெற வேண்டும் என கூறி அவர்கள் கண்டன கோஷத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக கூட்டத்தை பெரும்பாலான தி.மு.க. கவுன்சிலர்களே புறக்கணித்த சம்பவமும், அதே போல ஆணையாளரை கண்டித்து நகராட்சி தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story