பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எலத்தகிரியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பர்கூர்
கந்திகுப்பம் அருகே உள்ள எலத்தகிரியில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவிகளுக்கு வரலாறு பட்டதாரி ஆசிரியர் ராஜா (வயது 59) என்பவரும், ஆய்வக உதவியாளர் நடேசன் (59) ஆகியோர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டு உறுதியானதால் பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், எலத்தகிரி பஸ் நிறுத்தும் அருகே, கிழக்கு மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான முனிராஜ், மாநில மகளிர் அணி துணைத்தலைவர் மதிவதனகிரி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில மகளிர் அணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் ஆய்வக உதவியாளர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.