கிருஷ்ணகிரியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
நகர மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்தக்கோரி கிருஷ்ணகிரியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை போலுப்பள்ளியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இந்த அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன. இதனிடையே நகர மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்தக்கோரி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் கிருஷ்ணகிரி பழைய அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் நரேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் நரசிம்மன் கலந்து கொண்டு பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையை 110 படுக்கைகள் கொண்ட தாலுகா மருத்துவமனையாக மாற்றி மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் பா.ஜ.க.வினர் சாமியானா அமைத்து, நாற்காலிகள் போட்டு வைத்தனர். அப்போது அங்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சாமியானாவை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.