ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கமும், சி.ஐ.டி.யு. கட்சியினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சுழி,
திருச்சுழி அருகே தமிழ்பாடியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கமும், சி.ஐ.டி.யு. கட்சியினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் டெய்சி தலைமை தாங்கினார், இந்திராணி மற்றும் சவுபாக்கியவதி முன்னிலை வகித்தனர். 10 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையங்களாக மாற்றவும், 5-க்கும் குறைவாக உள்ள மினிமையங்களை பிரதான மையங்களோடு இணைப்பதை கைவிடக்கோரியும், பள்ளி மற்றும் கல்லூரிகளை போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்கிளைகள் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற 18-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டமும், 25-ந் தேதி காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.