மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, பெருமாள், அசோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மக்கள் பயன்பாட்டிற்கு வராததால், உயர்தர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு பொதுமக்கள் சேலம், கரூர் கோவை போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, ஜெயமணி, சுரேஷ், கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செல்வராசு, சின்னசாமி, மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் தங்கராஜ் நன்றி கூறினார்.