ஒப்பந்த முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் துப்புரவு தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முன்பாக ஒப்பந்த முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கே.சாமிநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.முருகானந்தம், பாலகுருவையா, யுவராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் எம்.காசி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எம்.சரவணன் நிறைவுரை ஆற்றினார்.
சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் பி.காத்தவராயன், மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், சங்க செயலாளர் சி.எம்.லாரன்ஸ், மாவட்ட துணைத் தலைவர் வி.குபேந்திரன், குணசேகரன், சிலம்பரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பொருளாளர் சி.எம்.தசரதன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த முறையை ஒழித்திட வேண்டும், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.507 வழங்க வேண்டும். நிரந்தர துப்புரவு தொழிலாளிகள் ஏற்கனவே பணி செய்த பகுதியிலேயே பணி செய்யவும், கூடுதல் தொழிலாளிகளை அவர்களுடன் இணைத்திட வேண்டும். தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.