பொது கல்வித்துறையோடு ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைப்பதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
பொது கல்வித்துறையோடு ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைப்பதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பொது கல்வித்துறையோடு இணைப்பதை தமிழக அரசு கைவிடக்கோரி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை பெரம்பலூரில் நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கர் தலைமை தாங்கினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் காமராசு, ஆதி அறக்கட்டளையின் நிறுவனர் திருமாறன், அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் தங்க.முருகன், பீம் ஆர்மி பொதுச் செயலாளர் பிரேம் ஆனந்தராஜ், இந்திய குடியரசு கட்சி (எம்) தலைவர் கலிய.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பொது கல்வித்துறையோடு இணைப்பதை கைவிட வேண்டும். ஆதிதிராவிடர் நல பள்ளிகளை மேலாண்மை செய்திட பொது கல்வித்துறையை போன்று தனிக்கல்வி துறை உருவாக்கிட வேண்டும். ஆதிதிராவிடர் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வருவாய்த்துறை தலையிடுவதை கைவிட்டு, முற்றிலும் தனி நிர்வாகத்தை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.