தடையை மீறி ஆர்ப்பாட்டம்:இந்து முன்னணியினர் 16 பேர் கைது


தடையை மீறி ஆர்ப்பாட்டம்:இந்து முன்னணியினர் 16 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்காக மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமையில், மாவட்ட செயலாளர் உமையராஜன் மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர்.

அவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் அவர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல், சின்னமனூர் மார்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


Related Tags :
Next Story