இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்க முயல்கின்றன. தமிழ்நாட்டில் இதுகுறித்த விழிப்புணர்வு பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு இந்தி திணிப்புக்கு எதிராக தனித்தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறது.
இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து தலைமையில், தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ் கூட்டமைப்பு இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நிகழும் இந்த போராட்டத்தில் தமிழறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக கலந்துகொள்கிறார்கள்.
கலந்துகொள்ளும் அமைப்புகள்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெற்றித்தமிழர் பேரவை, வடசென்னை தமிழ்ச்சங்கம், தலைநகர் தமிழ்ச்சங்கம், பன்னாட்டு தமிழுறவு மன்றம், உலகத்தமிழர் பேரவை, சென்னை முத்தமிழ்ச்சங்கம், உறவு சுரங்கம், உலக திருக்குறள் இணைய கல்விக்கழகம், வள்ளுவர் மேடை, தொன்மை தமிழ்ச்சங்கம், கொளத்தூர் கலை இலக்கிய மன்றம், திருவள்ளூர் பாவேந்தர் இலக்கிய பேரவை, மாதவரம் திருக்குறள் கழகம், கலந்துரையாடுவோம் குழு, நாளந்தா இலக்கிய நலச்சங்கம், தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவை, கவிஓவியா கலை இலக்கிய மன்றம், சமத்துவ இலக்கியக்கழகம், தமிழ்நாடு மாணவர்-இளையோர் கூட்டமைப்பு, இலக்கியச்சோலை, தமிழ்ப்பணி, கவிதை உறவு, தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை, நிலா வட்டம், பாரதி தமிழ்ச்சங்கம், இலக்கிய வானம், திசைகள் கலை இலக்கிய மன்றம், பொதிகை மின்னல் இலக்கிய கூடல், சமூகசட்ட அரசியல் விழிப்புணர்வு அமைப்பு, கவிச்செல்வர் படைப்பகம், திண்டிவனம் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் கலந்துகொள்கின்றன.
கடமை
அழைப்பே தேவையில்லை; இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரின் கட்டாய கடமை என்று கருதி தமிழர் பெருங்கூட்டம் திரளும் என்று தமிழ்க்கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.