லெப்பைக்குடிகாடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
வேப்பூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கண்டித்து லெப்பைக்குடிகாடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழக்குடிகாடு வெள்ளாற்று தடுப்பணையில் இருந்து 73 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக தமிழக அரசு வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி 70 சதவீத பணிகளை முடித்துள்ளது.
இந்தநிலையில், லெப்பைக்குடிகாடு, பென்னகோணம், கீழக்குடிகாடு ஆகிய கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நீர் ஆதாரம் உள்ள வேறு பகுதியில் தமிழக அரசு தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில், லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் லெப்பைக்குடிகாடு, கீழக்குடிகாடு, பென்னகோணம், அரங்கூர், வாகையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் லெப்பைக்குடிகாடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மங்களமேடு உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் எறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.