அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
கவுல்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், கவுல்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கவுல்பாளையம் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நலச்சங்கத்திற்கு ஜனநாயக முறைப்படி குடியிருப்பு வாசிகள் பங்கேற்புடன் நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும். முறைகேடாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை ரத்து செய்ய வேண்டும். அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி கட்டணம் வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
சேதமடைந்த பகுதிகளை...
குன்னம் தாலுகா, வேப்பூா் கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஸ்ரீ பெரியநாயகி கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடும்பத்தினரிடம் இருந்து, அந்த பாதையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பணி செய்து வந்த கொசு ஒழிப்பு பணியாளர்கள் 10 பேரை கடந்த 1-ந் தேதியில் இருந்து பணிக்கு வர வேண்டாம் என்று பேரூராட்சி நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டதாம். இதனால் அந்த 10 பணியாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், அக்கட்சியினரும், மனிதநேய மக்கள் கட்சியினரும் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலா தளமான வரலாற்று சிறப்பு மிக்க வாய்ந்த ரஞ்சன்குடி கோட்டை கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையினால் சேதமடைந்தது. ரஞ்சன்குடி கோட்டையில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
புத்தக கண்காட்சி நடத்த மனு
தமிழ்நாடு சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் தாஹிர்பாட்சா கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் கூட்டுறவு மகளிர் பால்பண்ணை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா, ஓலைப்பாடி தெற்கு தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புமணி கொடுத்த மனுவில், ஆலத்தூர் தாலுகா பகுதிகளுக்கு அருகே உள்ள குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை வேப்பூரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
204 மனுக்கள்
பெரம்பலூர் தாலுகா அருமடல் மேற்கு தெருவை சேர்ந்த சாந்தி என்பவர் கொடுத்த மனுவில், போலி வில்லங்கம், போலி பட்டா, போலி பத்திரம் தயார் செய்து வீடு இருப்பதை வீடு இல்லை என்று மோசடியான முறையில் பத்திரம் பதிவு செய்து நிலத்தை அபகரித்த நபர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர், ஓய்வு பெற்ற சார்பதிவாளர், தாசில்தார், ஆவண எழுத்தர் மீதும் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 204 மனுக்களை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பெற்று கொண்டார். மேலும் அந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.