மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
மனித உரிமை தினத்தையொட்டி மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்,
அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், 10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இடங்களில் விசாகா குழு அமைக்க வேண்டும், போதை பழக்க வழக்கங்களுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளை அதிலிருந்து மீட்பதோடு, அவர்களுக்கு போதை பொருட்களை வினியோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ரெகுபதி தலைமை தாங்கினார். கீதா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் ராதா, ஜாக்குலின், அல்போன்சா, சந்திரகலா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சுஜா ஜாஸ்மின் போராட்டத்தை முடித்து வைத்தார். இதில் கூட்டுக்குழு தலைவர் சகுந்தலா உள்பட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.