மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் மின்கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
ஊட்டியில் மின்கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்து ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். கூடலூர் எம்.எல்ஏ. பொன்.ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, கவுன்சிலர் அக்கிம்பாபு உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போன்ற தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
மேலும் மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டணம் உயர்த்தியதை கண்டிக்கிறோம். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கையில் பதாகைகளை கையில் ஏந்தியபடி வலியுறுத்தினர்.
ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தையொட்டி அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.