பெல் பாரத மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெல் பாரத மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு புனல் மின் நிலைய ஆணைகளை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காமல் பெல் நிறுவனத்திற்கு வழங்க வலியுறுத்தி பெல் பாரத மஸ்தூர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கி கூறியதாவது:- தமிழக அரசு 11,100 மெகாவாட் நீரேற்று புனல் மின் நிலையங்களை ரூ.77 ஆயிரம் கோடியில் புதிதாக கட்டி அமைக்கும் பணியை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். புனல் மின் நிலையங்களை தொடர்ந்து இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலையை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கோ அல்லது பெல் நிறுவனத்திற்கோ வழங்க வேண்டும். இல்லையென்றால் பெல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் புனல் மின் நிலையங்களை நிறுவி தொடர்ந்து இயக்கும் வேலையை செயல்படுத்த வேண்டும். இந்த பணிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கினால் தமிழகத்தில் பெல் நிறுவனத்தை நம்பி உள்ள 1 லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். எனவே சட்டமன்றத்தில் அறிவித்த பி.பி. அறிவிப்பை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெல் பாரத மஸ்தூர் சங்க செயல் தலைவர் மனோஜ், ஜாயின் கமிட்டி உறுப்பினர் அங்குசாமி, துப்பாக்கி தொழிற்சாலை பாரத மஸ்தூர் சங்க செயலாளர் அருள் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.