பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வெண்ணைமலையில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தையல் சங்க கவுரவ தலைவர் ஹோச்சுமின் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், கட்டுமான தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, தலைவர் சரவணன், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
கட்டுமான நலவாரியம் போல் அனைத்து உடலுழைப்பு நலவாரியங்களுக்கும் பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். பென்ஷன் மாதந்தோறும் 10-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். அனைத்து பணப்பயன்களும் 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். வீடு கட்ட ரூ.4 லட்சம், இலவச தையல் மிஷின் வழங்கிட வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும். பென்ஷன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். உடலுழைப்பு நலவாரிய பணப்பயன்களை விரைந்து வழங்க அரசே நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.