தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தென்காசியில் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தென்னை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போது தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக அவர்கள் வந்தனர்.

கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.140-ம், உரித்த தேங்காய் கிலோவுக்கு ரூ.50-ம் விலை நிர்ணயம் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி தேங்காய் எண்ணெய்யை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் வினியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது தேங்காய்களை தரையில் போட்டு உடைக்க முயற்சி செய்தனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்து தேங்காய்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்திற்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மீரா கனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் காதர் அவுலியா, துணை செயலாளர் சாகுல் ஹமீது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், வட்டார செயலாளர் பட்டாபிராமன், தென்னை விவசாயிகள் சங்க தலைவர் மாரியப்பன், பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story