வேளாண்மை கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
செங்கோட்டையில் நெல் வயலில் உருளும் களை கருவி மூலம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சரவணன் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் 9 பேர் செங்கோட்டை வட்டாரத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முகாமிட்டு விவசாயிகளுடன் தங்களது விவசாய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
செங்கோட்டை பகுதியில் விவசாயிகள் பிசான நெல் சாகுபடி செய்து வரும் நிலையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளிடம் வரிசை நடவில் நடப்பட்டுள்ள திருந்திய நெல் சாகுபடி திடல்களில் 'கோனோ வீடர்' என்ற உருளும் களை கருவி கொண்டு எவ்வாறு களைகளை கட்டுப்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் தலைமை தாங்கி, களை கருவியை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த செயல்விளக்க நிகழ்ச்சியில், மாணவர்கள் ரகுநந்தன், சஞ்சீவி, வெயிலுமுத்து, குமரன், துரைப்பாண்டி, வல்லரசு, மணிகண்டன், ராஜ், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.