நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சியில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மண்டல செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மண்டல பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு துறை அலுவலர்களை முதுநிலை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும், வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், நெல் எடை குறைவிற்கு கொள்முதல் பணியாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும், சுமை தூக்குவோரை அவுட் சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், அகவிலைப்படி உயர்வை ஜனவரி முதல் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.