நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் பொருட்கள் விலையை குறைக்க கோரி ஊட்டியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

ஆவின் பொருட்கள் விலையை குறைக்க கோரி ஊட்டியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஆவின் பொருட்கள் விலையை குறைக்க வலியுறுத்தி குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஊட்டி ஆவின் நிறுவனம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்துரை தலைமை தாங்கினார். கோத்தகிரி நுகர்வோர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் மற்றும் பிற பால் பொருட்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பதை கண்டிக்கிறோம். ஆவின் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். உலக நுகர்வோர் தினமான நேற்று நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

விநாயகரிடம் மனு

ஆர்ப்பாட்டத்தில் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசும்போது, தமிழகத்தில் பிற மாவட்டங்களில் அரசு நிர்ணயித்த விலையில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது, இந்த மாவட்ட மக்களை சுரண்டும் வகையில் உள்ளது. மேலும் தொழிலாளர்கள், விவசாயிகள் நிறைந்த நீலகிரியில் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்வது சாதாரண, நடுத்தர மக்களை வஞ்சிப்பதாக இருக்கிறது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாகம், ஆவின் நிர்வாகம், பால் வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றார். அதன் பின்னர் ஆவின் நிறுவன வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முடிவில் நிர்வாகி தர்மசீலன் நன்றி கூறினார்.


Next Story